விருதுநகர் | பள்ளியில் புகுந்த மழை நீர் - மாணவர்கள் தவிப்பு...
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை சுற்றிலும் மழை நீர் தேங்கி காணப்படுவதால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகே அங்கன்வாடி மையமும் இயங்கி வருகிறது. இங்கு இருபதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்குச் செல்லும் பாதை புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் இப்பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக காணப்படுகிறது.
மழை நீர் பள்ளியை சுற்றி தேங்கி காணப்படுகிறது. பள்ளி மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளது. பள்ளியை சுற்றி மழை நீர் தேங்கி இருப்பதால் ராமானுஜபுரத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் தற்காலிகமாக பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி மாணவ மாணவியர்கள் அனைவரும் நூலக கட்டிடத்தில் அமர்ந்து பாடம் படிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை சுற்றி மழை நீர் தேங்கி புதர் மண்டி விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே பள்ளியை சுற்றி மழை நீர் தேங்காமல் சாலை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.