#WeatherUpdate | தமிழ்நாட்டில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. இன்று மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுவடையும் என்றும், தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா கடற்கரை நோக்கி வரும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் அடுத்து 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் மிக கனமழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதையடுத்து, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : ChennaiRains | பருவமழை முன்னெச்சரிக்கை – நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 166.70 மி.மீ மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம், வானூரில் தலா 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு முதல் அதிகாலை வரை கனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் மழை அளவு 100. 36 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இன்றும் தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.