"அரசின் முன்னெச்சரிக்கையின்படி நடந்து கொள்ள வேண்டும்" | பொதுமக்களுக்கு முதலமைச்சர் #MKStalin அறிவுரை!
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் 200 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதுதொடர்பாக பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரைகள் வருமாறு:
- விவசாயிகள், மீனவர்கள், நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமானப் பணியை மேற்கொள்பவர்கள் கனமழைக்கான திட்டமிடுதலையும், முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.
- தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.
- முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
- கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூடவேண்டாம்.
- அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள் : முன்னாள் மனைவி புகார்… நடிகர் பாலா கைது!
- கர்ப்பிணிகள் , நோயாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.
- பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
- அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும்"
இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.