#RainAlert | இரவு 7 மணி வரை வெளுத்து வாங்கப் போகும் மழை... எங்கெல்லாம் தெரியுமா?
தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, சென்னையில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனையடுத்து, திடீரென்று சுமார் 1 மணி நேரமாக நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, புரசைவாக்கம், அண்ணா நகர் உள்பட சென்னையில் பெரும்பாலான இடங்களின் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்த வகையில், இரவு 7 மணி வரை கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.