#RainAlert | சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த 14-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 16-ம் தேதி கனமழை பெய்தது. வானிலை ஆய்வு மையம் கணித்தபடி, சென்னைக்கு அருகே வடக்கே எண்ணூரையொட்டி கடந்த 17ம் தேதி கரையை கடந்தது.
இந்த சூழலில், வங்கக்கடலில் நாளை மறுநாள் (அக். 21) மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் வரும் 25ம் தேதி வரை மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.