ஆறே மாதத்தில் ராமர் கோயில் கூரையில் மழை நீர் கசிவு! தலைமை பூசாரி குற்றச்சாட்டு!
கட்டி 6 மாதங்கள் ஆவதற்குள் அயோத்தி ராமர் கோயிலின் கூரை, பருவத்தின் முதல் மழைக்கே ஒழுகியது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளார். நடப்பாண்டின் பருவமழை தொடங்கும் நேரத்தில் அயோத்தி ராமர் கோயிலின் மேற்கூரை கசிந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், "ஜனவரி 22 அன்று கோயில் பிரான் பிரதிஷ்டா விழா நடத்தப்பட்டது. முழுதாய் ஆறு மாதங்கள் ஆவதற்குள் கூரையிலிருந்து நீர் கசிகிறது. இப்படியெல்லாம் நடக்கும் என்று எவரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
குறிப்பாக ராம் லல்லா சிலை அமைந்துள்ள இடத்திற்கு அருகில் கூரையில் கசிவு கண்டிருப்பது பக்தர்களுக்கு கவலை தந்திருக்கிறது. ராமர் கோயிலின் மேலாக பெய்யும் மழை முறையாக தரைக்கு வழிவதற்கான வசதி இல்லாததால், மேலே தண்ணீர் தேங்கி நின்று அதுவே கசிந்து, சிலைக்கு அருகில் தேங்கி நிற்கிறது.
திட்டமிட்டபடி ஜூலை 2025-க்குள் ராமர் கோயில் கட்டுமானப்பணிகள் முழுமை அடைவது கடினம்” என்றும் மேலும், கோயில் கட்டுமானத்தின் நிறைவுறா பணிகள் குறித்தும் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கவலை தெரிவித்துள்ளார்.