புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஒழுகும் மழை நீர் | வைரலாகும் வீடியோ!
நாடாளுமன்ற கட்டிடத்தில் மழைநீர் ஒழுகுகிறது அதை வாளி வைத்து பிடிப்பது போலவும் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் மழை நீர் கசியும் பகுதியில் பிளாஸ்டிக் பக்கெட் வைத்து பிடிக்கும் காணொலிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தில்லி பகுதியில் புதன்கிழமை மாலை பெய்த மிககனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. சுமார் 1 மணிநேரத்தில் 112.5 மி.மீ, மேல் மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மழை நீர் தேங்கியதுடன், புதிய கட்டடத்தின் மையப் பகுதியில் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளார். அந்த நோட்டீஸில், நாடாளுமன்றத்தின் மையப் பகுதியில் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளது குறித்து அவை நடவடிக்கையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்துக் கட்சி எம்பிக்களும் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டு நாடாளுமன்ற கட்டடத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் புதிய கட்டடம் கடந்தாண்டு மே 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.