டெல்லியில் மழைநீர் தேங்கிய குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!
டெல்லி பிரேம் நகர் பகுதியில் மழைநீர் நிரம்பிய குளத்தில் இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பிரேம் நகர் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் - 9ம் தேதி ) மாலையில் கனமழை பெய்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ராணி கேரா கிராமத்தில் உள்ள குளத்தில் மழைநீர் முழுமையாக நிரம்பியுள்ளது.
இந்நிலையில் பிரேம் நகர் காலனியைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் ராணி கேரா குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு குளித்துக்கொண்டிருந்த 9 மற்றும் 15 வயதுடைய இரு சிறார்கள் மிகவும் ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்தனர்.
இதையும் படியுங்கள் : வயநாடு நிலச்சரிவு: நிவாரண முகாம்களில் தங்கிருக்கும் மக்களை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி!
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்டனர். பின்னர் அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.