Rain Alert | மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை - இந்திய பெருங்ககடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு (23.30 மணி அளவில்) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து, இன்று (27-11-2025) காலை 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று இலங்கை அம்பாந்தோட்டையிலிருந்து, கிழக்கு-வடகிழக்கே சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கை மட்டக்கிளப்பிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 640 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 3 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் புயலாக மேலும் வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று (27-11-2025) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.