"ராகு காலம் முடிந்து ராகுல் காலம் தொடங்கிவிட்டது" - தேர்தல் பரப்புரையில் தமிமுன் அன்சாரி பேச்சு!
“நாட்டில் ராகு காலம் முடிந்து ராகுல் காலம் தொடங்கிவிட்டது” என மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புருஸ்க்கு வாக்கு கேட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாளையங்கோட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, அமைச்சர் தங்கம் தென்னரசு, முன்னாள் மத்திய அமைச்சர் K.V. தங்கபாலு, முன்னாள் எம்.பி தனுஷ்கோடி ஆதித்தன், மஜக தலைவர் தமிமுன் அன்சாரி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய தமிமுன் அன்சாரி தெரிவித்ததாவது..
” காங்கிரஸ் கட்சி தந்த பிரதமர்களால் இந்தியாவின் பெருமை சர்வதேச அரங்கில் உயர்ந்தது. மோடியின் தவறான கொள்கைகளால் இந்தியாவின் பெருமை சீர்குலைந்துள்ளது. இந்தியா முன்னேறியுள்ளதாக மோடி கூறுகிறார். அவர் 10 லட்சம் ரூபாய்க்கு கோட் சூட் அணிகிறார். தற்போது அவர் அணிந்துள்ள கூலிங் க்ளாஸின் மதிப்பு 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயாகும்.
அவர் தான் முன்னேறியுள்ளார். இவரது ஆட்சியில் சிறு, குறு தொழில்கள் லட்சக்கணக்கில் மூடப்பட்டுள்ளது. விவசாயிகள் 16 மாதங்கள் இவரது ஆட்சியில் டெல்லியில் போராடியுள்ளனர். இவர்களது ஆட்சியில் வெளிநாட்டு உணவான பர்கருக்கு GST வரி குறைவாம். குடிசை தொழிலான கடலை மிட்டாய்க்கு அதிக வரியாம், இதுதான் இவர்களது தொழில் கொள்கை. சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநிலம் கலவரத்தால் ரத்த சகதியில் மூழ்கியது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட சொந்த நாட்டு மக்களை மோடி போய் பார்த்து ஆறுதல் கூறவில்லை. ஆனால் ராகுல் காந்தியின் நடை பயணம் நாட்டின் கிழக்கையும், மேற்கையும் , தெற்கையும் , வடக்கையும் இணைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக மாறியுள்ளது. நாடெங்கும் மாற்றங்களுக்கான சூழல் உருவாகி விட்டது. நாட்டில் ராகு காலம் முடிந்து ராகுல் காலம் தொடங்கிவிட்டது” எனப் பேசினார்.