For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நெல்லை, கோவையில் ராகுல் காந்தி இன்று பரப்புரை - பொதுமக்கள் திரண்டு வருமாறு செல்வப்பெருந்தகை அழைப்பு!

07:48 AM Apr 12, 2024 IST | Web Editor
நெல்லை  கோவையில் ராகுல் காந்தி இன்று பரப்புரை   பொதுமக்கள் திரண்டு வருமாறு செல்வப்பெருந்தகை அழைப்பு
Advertisement

I.N.D.I.A. கூட்டணி சார்பாக நெல்லையில் நடைபெற உள்ள பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங். மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்ள உள்ள நிலையில், பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ளுமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை செய்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று நெல்லை, கோவையில் பரப்புரை மேற்கொள்கிறார். இந்நிலையில் இந்த பொதுக்கூட்டங்களில் மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு ஆதரவு தருமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : "திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது" - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :

“மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற பாஜகவின் அரசியலுக்கு எதிராக முதலில் இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4,000 கி.மீ., தூரத்தையும், இரண்டாவது முறை 6,500 கி.மீ. தூரத்தை மணிப்பூரில் இருந்து மும்பை வரை இந்திய ஒற்றுமை நீதி பயணத்தையும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டார். இதற்கு நாட்டு மக்களின் ஆதரவையும், அன்பையும் பெற்றார்.

I.N.D.I.A. கூட்டணி சார்பாக இன்று மாலை 3.00 மணியளவில் நெல்லை பெல் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்கிறார். அதேபோல, மாலை 6.00 மணியளவில் கோயம்புத்தூர், செட்டிபாளையம், எல்.அன்.டி. பைபாஸ் சாலையில் நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இணைந்து பங்கேற்கிறார்.

பாஜக ஆட்சி அமைத்தது முதல் சமூக நீதியில் அக்கறையின்றியும், இடஒதுக்கீட்டு முறைக்கு மாற்றாகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், உரிய பிரதிநிதித்துவம் இல்லாமல் சமூக நீதி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் கீழ், மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான 27 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. இதனால் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 10 ஆயிரம் இடங்கள் பறிபோனதுடன், அந்த இடங்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டன.

2024 தேர்தலுக்குப் பிறகு I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, இடஒதுக்கீட்டில் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து, சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிற தேர்தல் பரப்புரை கூட்டங்களுக்கு மக்கள் திரண்டு வருகை புரிந்து I.N.D.I.A. கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும்”

இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement