#Rahul Gandhi பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தால் 30 இடங்களை கூடுதலாக வென்றிருக்கலாம் - சஞ்சய் ராவத்
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்கூட்டியே அறிவித்திருந்தால், இந்தியா கூட்டணிக்கு கூடுதலாக 30 இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும் என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனா கட்சி (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து அமைத்துள்ள மகா விகாஸ் அகாதி கூட்டணி, மக்களவை தேர்தலை போலவே எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின் (உத்தவ் தாக்கரே அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்ததாவது..
”முதலமைச்சர் வேட்பாளரை பார்த்துதான், மக்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்ற எண்ணத்தை மாற்றியமைத்துக் கொள்கின்றனர். மகாராஷ்டிரத்தில் மாநில அரசை ஆட்சியிலிருந்து மாற்றும் முயற்சியில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள 3 கட்சிகளும் கடுமையாக உழைத்து வருகின்றன. எங்கள் கூட்டணியிலிருந்து, முதலமைச்சர் வேட்பாளராக யாரை தேர்ந்தெடுத்தாலும் நாங்கள் ஆதரிப்போம். மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருந்தால், இந்தியா கூட்டணிக்கு கூடுதலாக 25 முதல் 30 இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும்.
இதையும் படியுங்கள் ; #Vijay69 – படப்பிடிப்பு குறித்து வெளியான புதிய அப்டேட்!
சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி 234 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒருவேளை, பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தால், இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 264-ஆக அதிகரித்திருக்கக்கூடும். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 263-ஆக(293 தொகுதிகளிலிருந்து) குறைந்திருக்கக்கூடும். இந்த சூழலில், மத்தியில் ஆட்சிப்பொறுப்பை இந்தியா கூட்டணி ஏற்கும் நிலைமை உருவாகியிருக்கலாம்”
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.