டெம்போவில் பயணித்தபடி வாக்கு சேகரித்த ராகுல்காந்தி! - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
ஹரியானா மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டெம்போ வாகனத்தில் சென்றபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3-ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும், 49 தொகுதிகளில் கடந்த 20ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.
6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும், 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பீகாரில் 8 தொகுதிகள், ஹரியானாவில் 10 தொகுதிகள், ஜம்மு – காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற மே - 25ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் தலைவர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டெம்போ வாகனத்தில் சென்றபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில், அதானி, அம்பானி குறித்து பேசாமல் இருக்க காங்கிரஸ் டெம்போவில் பணம் வாங்கியதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பேசினார்.
இதையும் படியுங்கள் : பிரிட்டனில் ஜூலை 4-ல் பொதுத்தேர்தல் – பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு!
அப்போது அவர் பேசியதாவது :
"பிரதமரின் கருத்திற்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி, காங்கிரஸ் டெம்போவில் பணம் வாங்கியது மோடிக்கு எப்படி தெரியும்? முன் அனுபவம் உண்டா? அப்படி காங்கிரஸ் வாங்கியது என்றால் அமலாக்கத்துறை, சிபிஐயை விசாரணைக்கு அனுப்புங்கள். ஜூன் 4-ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிபத் திட்டத்தை கிழித்து எறிவோம்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஹரியானாவில் பிரசாரத்துக்கு இடையே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டெம்போவின் பின்புறம் நின்றபடி பயணித்துக் கொண்டே மக்களிடம் வாக்கு சேகரிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ், "மோடியின் டெம்போ நியாயமற்றது, ஆனால் காங்கிரஸ் டெம்போ நியாயமானது" எனத் தெரிவித்துள்ளது.