நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வந்த சில நிமிடங்களில் புகை குப்பி வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!
மக்களவைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வந்த சில நிமிடங்களில் மர்ம நபர்கள் புகை குப்பி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று (டிச.13) வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மக்களவையின் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவர் திடீரென்று பிற்பகல் 1.12 மணியளவில் அவைக்குள் குதித்தனர்.
'சர்வாதிகாரம் ஒழிக' என்ற முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றவர்களை எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தியதாகவும், அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் புகைக் குப்பிகளை வீசியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : ‘மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்’ – மஹுவா மொய்த்ரா முறையீடு!
இவர்கள் இருவரும் இன்று காலை மக்களவை அலுவல்கள் தொடங்கியது முதலே பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்ததாகவும், பிற்பகல் 1 மணியளவில் ராகுல் காந்தி அவைக்கு வந்த சில நிமிடங்களில் புகைக் குப்பியை வீசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மக்களவைக்குள் இரண்டு மத்திய அமைச்சர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பாஜக பிரமுகர்கள் சென்றதால் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் மக்களவைக்கு இன்று (டிச.13) வராதது குறிப்பிடத்தக்கது.