#RajastanRoyals அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஐ.பி.எல் 2025 சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்.ஆர்) தலைமை பயிற்சியாளராக திரும்ப உள்ளார் என்கிற தகவல் உறுதியாகியுள்ளது.
நடைபெற போகும் ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் மீண்டும் இணையவுள்ளார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதே போல இலங்கை முன்னாள் வீரரான குமார் சங்ககாரா ராஜஸ்தான் அணிக்கு டைரக்டராகவும் தொடரவுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
கடந்த 2014 மற்றும் 2015 ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு ராகுல் ட்ராவிட் ஆலோசகராகச் செயல்பட்டார். அதற்கு முன்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாகவும் இவர் விளையாடி இருந்தார். ஆனால், அவர் கேப்டனாக பொறுப்பேற்ற அந்த வருடத்தில் ராஜஸ்தான் அணிக்கு அந்த தொடர் சரியாக அமையவில்லை.
ஐபிஎல் தொடரில் விளையாடிய போதும் கூட ராகுல் ட்ராவிடுக்கு பெரிதளவு வெற்றி கிடைத்ததே இல்லை எனக் கூறலாம். 2015-ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவின் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றினார். அதிலும், அவருக்கு சொல்லும் அளவிற்கு ஒரு வெற்றி கிடைக்கவில்லை.
அதன் பிறகு 2021-ம் ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார் ராகுல் டிராவிட். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) இயக்குநராகவும் பணியாற்றினார். இந்திய அணியில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் விளையாடும் பொழுதும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்திய அணிக்கு பயிற்சி கொடுக்கும் போதும் ஐசிசி தொடர்களில் வெற்றி கிடைத்ததில்லை.
ஆனால், இந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. தன் வாழ்நாளில் ஐசிசி கோப்பையைப் பார்க்காத ராகுல் டிராவிட், இந்த கோப்பையை வென்றதன் மூலம் முதல் முறையாக ஐசிசி கோப்பையை முத்தமிட்டுள்ளார். மேலும், இந்த தொடருடன் தனது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்தும் அவர் வைகை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, தலைமைப் பயிற்சியாளராக ராஜஸ்தான் அணியில் இணைய உள்ளார் எனும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், அவரது ரசிகர்கள் இது ராகுல் ட்ராவிடுக்கு சிறந்த கம்பேக்காக இருக்கும் என கூறி வருகின்றனர். மேலும், டி20 கோப்பையை வென்ற ஒரு வெற்றி பயிற்சியாளர் என்பதால் ராஜஸ்தான் அணியையும் இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.