“ரஃபா தாக்குதல் மூலம் காசாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை என தெரிகிறது” - ஐநா உறுப்பினர்கள் கண்டனம்!
ரஃபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது நேற்று முன்தினம் (மே 26) இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில் சுமார் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பினரும் போரை துவங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர்.
வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையேயான போருக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தும் இரு நாடுகளும் போரை கைவிடவில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்கா கூட, முக்கிய வெடி குண்டுகளை இனி வழங்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (மே 26) காசாவின் ராஃபா பகுதியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தல் அல் – சுல்தான் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் பல பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை இஸ்ரேலும் உறுதி செய்துள்ளது. ஆயிரம் பேர் இருந்த இந்த முகாமில் 2 ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தல் அல் – சுல்தான் பகுதியை நிவாரண பகுதியாக இஸ்ரேலே அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதலை நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்துள்ளது.
I condemn Israel’s actions which killed scores of innocent civilians who were only seeking shelter from this deadly conflict.
There is no safe place in Gaza.
This horror must stop.
— António Guterres (@antonioguterres) May 27, 2024
இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது. “இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் ஐ.நா மனித உரிமைகள் உயர்மட்ட குழுவின் ஆணையர் டர்க், “ரஃபாவில் நேற்று முன்தினம் (மே 26) இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மூலம் காசாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை என தெரிகிறது. ரஃபாவில் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து வரும் படங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இஸ்ரேல் தனது போர் உத்தியை மாற்றிக் கொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த மக்களை காக்கும் வகையிலான நடவடிக்கையை இஸ்ரேல் எடுத்தாக வேண்டும்” என தெரிவித்துள்ளார்.