எழுத்தாளர் ஆர்.அபிலாஷின் "கால்களின் கேள்விகள்" நூல் அறிமுகம்!
தமிழ் எழுத்துலகில் பரிட்சயமுள்ள எழுத்தாளராக அறியப்பட்ட ஆர்.அபிலாஷின் "கால்களின் கேள்விகள்" புத்தகம் குறித்த அறிமுகத்தை காணலாம்.
சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட அல்லது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி தான் பெரும்பாலான இலக்கியங்கள் பேசுகின்றன. ஆனாலும் கூட புறக்கணிக்கப்பட்ட மனிதர்களையும் தாண்டி சமூகத்தின் குறைந்தபட்ச Privilege-ஐ கூட அனுபவிக்காமல் தடுக்கப்படும் ஒடுக்கப்பட்டவர்களை பற்றி இங்கே யார் பேசுகிறார்கள்.
மிகவும் ஒடுக்கப்பட்டவர்களான பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், மாற்றுப் பாலினத்தினர்களை பற்றி அரிதாகத் தான் இலக்கியங்களும், புத்தகங்களும் பேசுகிறது. அப்படி மிக முக்கியமான புள்ளியில் இருந்து தான் மாற்றுத் திறனாளிகள் குறித்து விரிவாக இப்புத்தகத்தில் பேசியிருக்கிறார் கால்களின் கேள்விகள் எனும் புத்தகத்தின் ஆசிரியர் ஆர்.அபிலாஷ்.
ஆர்.அபிலாஷ் ஓரளவுக்கு தமிழ் எழுத்துலகில் அறிமுகமுள்ள எழுத்தாளர்தான். புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை தொடர்ச்சியாக எழுதி வந்த இவருக்கு 2014ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2007 முதல் சிறுபத்திரிகைகளான உயிர்மை, அமிர்தா, தாமரை, புதிய காற்று, புதிய பார்வை, தமிழ் பெமினா, காட்சிப்பிழை, அந்திமழை ஆகியவற்றில் கட்டுரை, சிறுகதை, கவிதை, மொழியாக்கம் ஆகிய படைப்புகளை வெளியிட்டு வருகிறார்.
கால்களின் கேள்விகள் :
இந்த ஆண்டு சென்னை புத்தக் காட்சியில் ஆர். அபிலாஷின் கால்களின் கேள்விகள் நூல் வெளியாகியுள்ளது. மாற்றுத்திறனாளிகளை அவர்களுடைய உடலைக் கடந்து அவர்களுடைய தன்னிலையை, உளவியலை, சமூகம், உறவு, சட்டம், ஊடகங்கள் சார்ந்து எழும் பிரச்னைகளை குறித்து இப்புத்தகம் விரிவாக பேசுகிறது.
அதேபோல மாற்றுத்திறனாளிகளின் உலகில் கடவுளுக்கும், மதத்துக்கும், அறத்துக்குமுள்ள இடத்தை அறிமுகப்படுத்துகிற நூலாக உள்ள இப்புத்தகம் தமிழில் இவ்வகைமையில் வெளியாகும் முதல் நூலாகும். இது ஒரு கோட்பாட்டு நூல் அல்ல. மாறாக மாற்றுத்திறனாளி அல்லாத பொதுமக்களை நோக்கி எளிமையாக உரையாட முயலும் வெகுஜன நூலாகும்.
” மற்றமையை புரிந்து கொள்ளுதல் என்பதே சிந்தனை மரபின் முக்கிய நோக்கம். மற்றமையாக தம்மை மாற்றிக் கொள்ளுதலே ஒரு உன்னதமான ஆன்மீகப் பயிற்சி. நவீன உலகில் மாற்றுத்திறனாளிகளே முதன்மையான மற்றமை என்பதால் அவர்களை புரிந்து கொள்ள வேண்டும் என எளிய வாதங்களை இப்புத்தகத்தில் முன்வைத்து வாசகர்கள் மனதில் சிந்தனையைத் தூண்டுகிறார். இப்புத்தகம் உயிர்மை பதிப்பகத்தில் சார்பில் வெளியாகியுள்ளது.
-ச.அகமது, நியூஸ்7 தமிழ்