For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் #DMK எம்.பி-க்கள் முன்வைத்த கேள்விகளும், கோரிக்கைகளும்!

09:55 PM Nov 29, 2024 IST | Web Editor
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்  dmk எம் பி க்கள் முன்வைத்த கேள்விகளும்  கோரிக்கைகளும்
Advertisement

குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் முன்வைத்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பார்க்கலாம்.

Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (நவ. 29) நடந்த குளிர்கால கூட்டத்தொடரில், திமுக எம்.பி-க்கள் சில கேள்விகள் மற்றும் கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த சூழலில், குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் முன்வைத்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பார்க்கலாம்.

தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை உடனடியாக விடுவிக்கவேண்டும்! - திமுக எம்.பி. பி.வில்சன் கேள்வி

சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைப்பதன் மூலம் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாநில அரசை நிர்பந்திக்கூடாது மற்றும் தமிழ்நாடு அனுப்பியிருக்கும் தேசிய கல்விக் கொள்கையை கடைப்பிடிப்பதை கட்டாயப்படுத்தும் விதியை விலக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் திமுக எம்.பி. P. விலசன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்திய தேசிய கல்விக் கொள்கை 2035-ம் ஆண்டுக்குள் மொத்த சேர்க்கை விகிதத்தை 50 சதவீதமாக அடைவதை இலக்காக கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு இவ்விலக்கை ஏற்கனவே அடைந்துவிட்டதன் காரணமாக மாநில அரசுகள் தனது சொந்த கல்விக் கொள்கையை உருவாக்க ஒன்றிய அரசு அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறையில் சமூக பன்முகத்தன்மை இல்லாதது ஏன்? - திமுக எம்.பி. P. வில்சன்

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் சமூக பன்முகத்தன்மை/இட ஒதுக்கீடுகள் தேவை என்பதை தனது முன்மொழியப்பட்ட நடைமுறை குறிப்பில் அரசு சேர்த்திருக்கிறதா என்று திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் P. விலசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தனது அறிக்கையில் அவர் கேட்டிருப்பதாவது :-

அனைத்து உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, முன்னேறிய வகுப்பினர், பெண்கள் மற்றும் சிறுபான்மை பிரிவு நீதிபதிகளின் 31.10.2024 அன்றுவரையிலான எண்ணிக்கை விவரங்களை வெளியிடவேண்டும்.

17.01.2023 அன்று உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த போதிலும் ராமசாமி நீலகண்டன் மற்றும் ஜான் சத்தியம் ஆகியோரின் பெயர்கள் நிலுவையில் உள்ளதன் காரணங்களை வெளியிட வேண்டும்.

31.10.2024 காலம்வரையில் அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் உள்ள மொத்த காலியிடங்களின் விவரங்கள் மற்றும் பணியிலிருக்கும் நீதிபதிகளின் எண்ணிகையையும் அரசு வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையை தடுத்திடுக! - திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி கோரிக்கை

    நாட்டில் மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த பத்தாண்டுகளாக நடந்த சம்பவங்களை கணக்கெடுத்து, ஆய்வுகளின் அடிப்படையில் வன்முறைகளை தடுக்கும் வகையிலும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்விதமாகவும் ஒன்றிய அரசு தனிச்சட்டம் இயற்றிடவேண்டும், அரசு மற்றும் தனியார் மருத்துவத் தொழிலில் ஈடுப்படுள்ள அனைவரின் பாதுகாப்பையும் அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

    குழந்தை திருமணமுறையை முற்றிலும் ஒழிக்கவேண்டும்! - திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி

      உலக அளவில் நடக்கும் குழந்தை திருமணங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் நடைபெறுகிறது என்று சமீபத்தில் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி குழந்தை திருமணமுறையை முற்றிலும் ஒழிப்பதற்கு ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்மீது திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

      அதில் அவர் கேட்டிருப்பது பின்வருமாறு :

      கடந்த மூன்று ஆண்டுகளில் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கையை மாநில வாரியாக, மாவட்ட வாரியாக கணக்கெடுக்க வேண்டும்.

      கிராமப்புறங்களில் குழந்தை திருமணங்களை தடுக்க அரசு எடுத்திருக்கும் புதிய முயற்சிகளின் விவரங்களை மாநிலம் வாரியாக அறிவிக்க வேண்டும்.

      அதேபோல் தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமணங்கள் குறித்த எண்ணிக்கை விவரம்.

      பன்னாட்டு சட்டங்களான பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான கூட்டமைப்பின் (CEDAW) அறிவுறத்தலின்படி சிறார்களின் நிச்சயதார்த்தங்களை சட்டப்படி குற்றம் என அரசு அறிவிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

      இந்தியா-சீனா எல்லை பிரச்னை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்! - திமுக எம்.பி. தயாநிதி மாறன்

        பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்திய- சீன எல்லைகளில் இரு நாடுகளும் தங்களது படைகளை விலக்கிக்கொள்ள ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் விவரங்களை ஒன்றிய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மேலும் எல்லை ஒப்பந்தம் குறித்து சீன அரசாங்கத்திடம் இருந்து முறையான அறிக்கை வந்துள்ளதா என்பதையும் தெரியப்படுத்த வேண்டும். மேலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் விசா வழங்குவதற்கான விதிகளை எளிதாக்கும் வழிமுறைகளை அரசு உருவாக்கவேண்டும் எனவும் இன்று மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேட்டுள்ளார்.

        Tags :
        Advertisement