Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் திமுக குறித்த கேள்வி - நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நேற்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் திமுக குறித்த கேள்வி கேட்கப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
08:08 PM Jun 16, 2025 IST | Web Editor
நேற்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் திமுக குறித்த கேள்வி கேட்கப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சியான திமுக குறித்த கேள்வி இடம்பெற்றிருந்தது. இச்சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

"நேற்று நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில், "இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழர் எனும் அடையாளம் கொண்டு மக்களை திமுக ஒன்றிணைத்ததா? இல்லையா?" என்ற ரீதியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2 தேர்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தாயுமானவர் என குறிப்பிட்டு கேள்வி வெளியிட்டு சர்ச்சையான நிலையில், தற்போது மீண்டுமொரு முறை ஆளுங்கட்சியான திமுக தொடர்பான கேள்வி கேட்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

தொல் பெருமைமிக்க தமிழக வரலாறும், பெருந்தலைவர் காமராசரைப் போன்ற பெரும் அரசியல் தலைவர்கள் முன்னெடுத்த நல்ல திட்டங்களும் பாடத்திட்டத்தில் இருக்கையில், தேர்வர்களின் அறிவை சோதிப்பதற்கு ஆளுங்கட்சியை போற்றும் விதமாக கேள்வியை வடிவமைப்பது தான் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சிறப்பம்சமா? தமிழ்நாடு அரசின் துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர் போன்ற பதவிகளுக்கான தேர்வில் இது போன்ற கேள்விகள் அவசியம் தானா? அல்லது, உயர்பதவியில் இருப்போர் ஆளும் அரசுக்கு என்றும் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆரம்பப் புள்ளியாக தகுதித் தேர்வில் இக்கேள்வி சேர்க்கப்பட்டதா போன்ற கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றன.

"3.5 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்" என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை தொடர்ந்து நடத்தாமலும், நடத்திய தேர்வுகளுக்கு உடனடியாக முடிவுகளையும் வெளியிடாமலும், முறையான வேலைவாய்ப்பின்றியும் தமிழ்நாட்டு இளைஞர்களை தவிக்கவிடும் திமுக அரசு, மாணவர்களின் தேர்வு வினாத்தாள்களில் சுய விளம்பர கேள்விகளை இடம்பெறச் செய்வதில் மட்டும் கவனம் செலுத்துவது முறையானதல்ல. எனவே, தனது வெற்று விளம்பரங்களை வெளியிடும் பிரசுரங்களாக அரசுத் தேர்வு வினாத்தாள்களை பயன்படுத்தாது, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பை பெருக்க முனைய வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags :
BJPDMKGroup 1Group 1 ExamMK Stalinnainar nagendrannews7 tamilTNPSC
Advertisement
Next Article