புஷ்பா 2 திரைப்படத்தின் FDFS - ஒரு டிக்கெட் விலை ரூ. 3000!
புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா - 2' திரைப்படம் டிசம்பர் 5ம் தேதி உலகளவில் வெளியாகிறது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இந்தியளவில் பெரிய வரவேற்பைப் பெற்றதால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வணிக வெற்றியை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. 'புஷ்பா - 2' திரைப்படம் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகியுள்ளது.
வெளியீட்டுத் தேதியில் தயாரிப்பு நிறுவனம் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதன்படி, டிச. 4ம் தேதி இரவு 9.30 மணியிலிருந்தே தெலங்கானாவில் புஷ்பா - 2 திரையிடப்படுகிறது. டிக்கெட் விலையாக ரூ. 1,120 - 1,240 வரை உயர்த்தியுள்ளனர். அதேநாளில் தமிழ்நாட்டில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள் : ஐசிசியின் தலைவராக பதவியேற்றார் ஜெய் ஷா!
இந்த நிலையில், மும்பையிலுள்ள பிவிஆர் சினிமாஸ் திரையரங்கில் புஷ்பா - 2 முதல் நாளுக்கான ஒரு டிக்கெட் விலை ரூ. 3,000 ஆக நிர்ணயம் செய்துள்ளனர். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பைப் பயன்படுத்தி இப்படி டிக்கெட் விலையைக் கடுமையாக உயர்த்தியது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுவே, இதுவரை வெளியான இந்திய திரைப்படங்களிலே அதிக டிக்கெட் விலை என்பது குறிப்பிடத்தக்கது