For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உயர்நீதிமன்றத்தில் அபராதமாக பெறும் தொகைக்கு சட்ட புத்தகம் கொள்முதல் - மதுரை கலைஞர் நூலகத்திற்கு வழங்க முடிவு!

10:07 AM Dec 02, 2023 IST | Web Editor
உயர்நீதிமன்றத்தில் அபராதமாக பெறும் தொகைக்கு சட்ட புத்தகம் கொள்முதல்   மதுரை கலைஞர் நூலகத்திற்கு வழங்க முடிவு
Advertisement

வழக்குகளில் விதிக்கப்படும் அபராதத் தொகையில் சட்டப் புத்தகங்களை வாங்கி மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு வழங்க உயர்நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

Advertisement

மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.216 கோடி மதிப்பீட்டில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 334 சதுர அடி கட்டப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நேற்று முன்தினம் தமிழ்நாடு  முதலமைச்சர் மு.கஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. நவீன கட்டுமானத் தொழில்நுட்பம் மற்றும் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் டிஜிட்டல் நூலகமாக இந்த நூலகம் செயல்பட்டு வருகிறது. 6 தளங்களுடன் ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமாக இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது.

முதல் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய நூல்கள், குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள், நாளிதழ்கள், குழந்தைகளுக்கான நூலகப் பிரிவும் உள்ளது. இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவும் உள்ளது. மூன்றாம் தளத்தில் 2,810 சதுர அடி பரப்பில் ஆங்கில நூல்கள் பிரிவும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும் உள்ளன.

நான்காம் தளத்தில் 1,990 சதுர அடி பரப்பில் அமரும் வசதியுடன் கூடிய ஆங்கில நூல் பிரிவு உள்ளது. அதோடு, போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களும் உள்ளன. 5-வது தளத்தில் மின் நூலகம், அரிய நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, போட்டித்தேர்வு நூல் பிரிவும் உள்ளது. 6-வது தளத்தில் 1,990 சதுர அடியில் கூட்ட அரங்கு, நூலகத்துக்கான ஸ்டூடியோ, மின்னணு உருவாக்கப் பிரிவு, நுண்படச்சுருள், நுண்பட நூலக நிர்வாகப் பிரிவு, நூல் கொள்முதல் பிரிவு எனப் பல பிரிவுகள், நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. 

மதுரையின் அடையாளமாக மாறிவிட்ட கலைஞர் நூலகத்தை சுற்றுலா தலம் போல் பாவித்து மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் வளர்ச்சிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய பங்காற்ற தொடங்கியுள்ளது. இந்த நீதிமன்றத்தில் மதுரை உட்பட 14 மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.

இந்த வழக்குகள் தவறானதாக இருந்தாலோ, நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்தாலோ, உண்மையை மறைத்திருந்தாலோ சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிபதிகள் குறிப்பிட்ட தொகையை அபராதமாகச் செலுத்த உத்தரவிடுவது வழக்கம். இவ்வாறு அபராதமாக விதிக்கப்படும் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதி,  வழக்கறிஞர் சேம நல நிதி மற்றும் தொண்டு நிறுவனங்கள், ஆதரவற்ற முதியோர் இல்லங்கள், அரசு பள்ளிகளுக்கு வழங்க உத்தரவிடப்படும்.

ஆனால் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டதும் அபராதமாக விதிக்கப்படும் பணத்தை கலைஞர் நூலகத்துக்கு வழங்க நீதிபதிகள் முடிவு செய்தனர். இதற்காக உயர்நீதிமன்ற கிளை பதிவாளர் பெயரில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு தனி வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. பெரும்பாலான நீதிபதிகள் அபராதம் விதிக்கப்படும் பணத்தை இந்த வங்கிக் கணக்கில் செலுத்துமாறு உத்தரவிடுகின்றனர்.

இவ்வாறு சேர்ந்த பணத்தில் உயர் நீதிமன்றம் சார்பில் சட்டப் புத்தகங்கள் வாங்கப்பட்டு கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு வழங்கப்பட்டன. இப்பணிக்காக உயர்நீதிமன்றத்தில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றக் கிளையில் இருந்து வரும் நிதியில் வாங்கப்படும் சட்டப் புத்தகங்களை வைப்பதற்காக கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 3-வது மாடியில் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement