சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!
பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வெற்றி பெற்றது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (மே. 1) நடைபெற்ற 49வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியது.
ரஹானே மற்றும் கெய்க்வாட் முதலில் களமிறங்கினர். ரஹானே 24 பந்தில் 29 ரன்கள் சேர்த்த நிலையில், ஹர்ப்ரீத் பிரார் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். பின்னர் மூன்றாவது வீரராக களமிறங்கிய சிவம் துபே, ஹர்ப்ரீத் பிரார் பந்தில் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். தொடர்ந்து, 10வது ஓவரில் ஜடேஜா 4 பந்தில் 2 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் சஹார் அவரது விக்கெட்டினை கைப்பற்றினார்.
15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியின் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய ரிஸ்வி தனது விக்கெட்டினை 16வது ஓவரை வீசிய ரபாடா பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 23 பந்தில் 21 ரன்கள் சேர்த்து வெளியேறினார். தொடர்ந்து 17.5 ஓவரில் சென்னை அணியின் கேப்டன் கெய்க்வாட் 62 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். தொடர்ந்து, மொயின் அலி 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில், தனது விக்கெட்டினை இழந்தார்.
இறுதியாக களமிறங்கிய தோனி 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மிட்செல் ஒரு பந்திற்கு ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு சென்னை அணி 162 ரன்கள் எடுத்தது. எனவே பஞ்சாப் அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
தொடர்ந்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாட பிரப்சிம்ரன் சிங் நான்காவது ஓவரில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ரிலீ ரோசோவ், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில், சிவம் துபே தனது முதல் ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் ஜானி பேர்ஸ்டோவ் அரைசதம் அடிக்காமல் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து ஷஷாங்க் சிங் களமிறங்க, ரிலீ ரோசோவ் ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் போல்ட் ஆகி 43 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் கேப்டன் சாம் கரண், ஷஷாங்க் சிங் இருவரும் கூட்டணி அமைத்து நிதானமாக விளையாடி இறுதியாக பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கடைசிவரை சாம் கரண் 27 ரன்களுடனும், ஷஷாங்க் சிங் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சென்னை இதுவரை பத்து போட்டியில் விளையாடியுள்ளது. இதில் ஐந்து போட்டியில் வெற்றியும், ஐந்து போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் பஞ்சாப் அணி 10 போட்டியில் விளையாடி 4 போட்டியில் வெற்றியும், 6 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது.