மாகாராஷ்டிரா - தண்ணீர் டிரம்மில் இறந்து கிடந்த 2 சிறுமிகள்.. பாலியல் வன்கொடுமை செய்த 54 வயது நபர் கைது!
மாகாராஷ்டிராவில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 54 வயது நபரை புனே போலீசார் கைது செய்துள்ளனர்.
புனேவின் ராஜ்குருநகர் பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் மகள்களான 10 மற்றும் 8 வயது சிறுமிகள் நேற்று முன் தினம் (25.12.2024) அன்று நண்பகலில் வீட்டின் வெளியே விளையாடிகொண்டிருந்துள்ளனர். அப்போது அதே வீட்டின் முதல் மாடியில் குடியிருக்கும் 54 வயதான அஜய் தாஸ் என்பவர் அச்சிறுமிகளை அழைத்துச் சென்றுள்ளார். குழந்தைகளை காணாமல் நாள் முழுவதும் தேடிய பெற்றோர் மாலையில் கெத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அஜய் தாஸ் தங்கியிருந்த முதல் மாடியில் உள்ள தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த டிரம்மில் இரண்டு சிறுமிகளும் உயிரிழந்த நிலையில் தலைகீழாக மிதந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அஜய் தாசை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் அவர் நேற்று அதிகாலை, ராஜ்குருநகரில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ள புனே நகரில் ஒரு லாட்ஜில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அங்கே இருந்து தப்பியோடுவதற்காக கிளம்பிக்கொண்டிருந்த அஜய் தாஸை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
மேலும் விசாரணை நடத்திய நிலையில், அஜய் தாஸ் கடந்த சில ஆண்டுகளாகவே ராஜ்குருநகர் பகுதியில் தங்கி சமையல் வேலை செய்து வந்துள்ளார். அதனால் அச்சிறுமிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அவரை நன்கு அறிவார்கள். எனவே அன்றைய தினம் வெளியே விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சகோதரிகளுக்கும் 'லட்டு' கொடுப்பதாக கூறி தனது அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கே சென்ற சிறுமிகள் அவரது அறைக்குள் நுழைந்ததும், அவர் மூத்த சகோதரியை கழிப்பறைக்குள் தள்ளியுள்ளார். இதைப் பார்த்ததும், தங்கை கத்தியதால் முதலில் அச்சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். பின்னர் தண்ணீர் டிரம்மில் அச்சிறுமியின் தலையை இறக்கும் வரை மூழ்கடித்துள்ளார். தங்கையின் மரணத்திற்குப் பிறகு, மூத்த சகோதரியை கழிவறைக்கு அழைத்துச் சென்று அத்துமீறியுள்ளார். அப்போது அச்சிறுமியும் அலற ஆரம்பித்ததால் அதே டிரம்மில் மூழ்கடித்து கொன்றதாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதன்பின், அஜய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிறுமிகளின் மரணத்துக்கு நீதி கேட்டு பெற்றோரும் உறவினர்களும் காவல் நிலையம் முன் போராட்டம் நடத்தினர்