புனே கார் விபத்து: ரத்த மாதிரியை மாற்றிய சிறுவனின் தாய் கைது!
புனேவில் மதுபோதையில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய வழக்கில் சிறுவனின் தாய் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரின் மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான வேதாந்த் தனது தந்தையின் சொகுசு காரை கடந்த 19 ஆம் தேதி அதிகாலை 3.15 மணியளவில் ஓட்டி சென்றுள்ளார். கல்யாணி நகர் ஜங்சன் பகுதியில் அதிவேகமாக சென்ற கார் எதிரே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த அனிஸ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய சிறுவன் வேதாந்த் அகர்வால் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சொகுசு காரை ஓட்டியது 17 வயது சிறுவன் என்றும், சம்பவத்தின் போது அவர் மதுபோதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
அந்த சிறுவன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விபத்து நடந்த 15 மணி நேரத்திற்குள் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிறுவனை மீண்டும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தங்களது குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்து வைத்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார்.
சிறுவன் விபத்து ஏற்பட்ட அன்று இரவு இரண்டு பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன்படி, சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது. இதனையடுத்து அந்த சிறுவன் குடிபோதையில் இருந்ததை உறுதி செய்ய போலீசார் அவனிடம் ரத்தப் பரிசோதனையை மேற்கொண்ட நிலையில், அந்த ரத்த மாதிரியை மாற்றிய வழக்கில் மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : டெல்லி – அமெரிக்கா விமானம் தாமதம்: ஏர் இந்தியா நிறுவனத்தின்கு நோட்டீஸ்!
இந்நிலையில், மகனின் ரத்தத்திற்கு பதிலாக தனது ரத்தத்தை மாற்றி, மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாக அவரது தாயார் ஷிவானி அகர்வால் சான்று பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. ஷிவானி அகர்வாலை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.