பரமக்குடி: கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேக விழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
பரமக்குடி அருகே புதுநகரில் அமைந்துள்ள பதினெட்டாம் படி கருப்பணசாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே புதுநகரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ
பதினெட்டாம் படி கருப்பணசாமி திருக்கோயில். இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. மங்கள இசையுடன் நேற்று தொடங்கிய கும்பாபிஷேக விழாவானது விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து மஹாபூர்ணாகுதி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் புனித நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து, அந்த நீரை சுவாமி சிலைகளுக்கு ஊற்றி கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பணசாமிக்கு பால்,சந்தனம், தயிர் மற்றும் திரவியப்பொடிகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, விஷேச தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து
கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.