புதுக்கோட்டை: மணல் குவாரி ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!
புதுக்கோட்டையில் மணல் குவாரி நடத்தி வரும் தொழிலதிபர் ராமச்சந்திரன் மற்றும்
அவரது தொழில்முறை கூட்டாளியான கரிகாலனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4-வது முறையாக இன்று சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டை முத்துப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எஸ். ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் மற்றும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அந்த வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தொழிலதிபர் ராமச்சந்திரன் தொடர்புடைய அவருடைய கார்ப்பரேட் அலுவலகம், கிரானைட் குவாரி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 4-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டபோது பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படியுங்கள்: “கடவுளை கண்டேன்! பக்தனால் கடவுளின் மனம் குளிர்ந்தது…”- மன்சூர் அலி கான் அறிக்கை
தமிழ்நாடு முழுவதும் உள்ள மணல் குவாரிகளில், விற்பனை செய்வதில் வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோதமான பண பரிமாற்றம் தொடர்பாக தற்போது 4-வது முறையாக சோதனை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 முறை நடைபெற்ற சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள் தொடர்பாக இந்த சோதனையானது நடைபெற்றது.
கடந்த செப்டம்பர் மாதம் மணல் குவாரி தொழிலதிபர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான நிஜாம் காலனியில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் முத்துப்பட்டினம் கிராமத்தில் உள்ள
அவரது வீட்டிலும், அவரது தொழில் முறை நண்பரான கறம்பக்குடியில் உள்ள கரிகாலன் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டு பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தற்பொழுது மீண்டும் தற்போது சோதனை நடைபெற்றதாக தெரிகிறது.