புதுச்சேரி சுதந்திர தின தேநீர் விருந்து - முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு!
புதுச்சேரி சுதந்திர தினத்தை முன்னிட்டு, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பிரதான எதிர்க்கட்சியான திமுக பங்கேற்காத நிலையில், காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த தேநீர் விருந்தில், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், காவல்துறை டிஜிபி மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு, சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
இந்த தேநீர் விருந்தை திமுக புறக்கணித்தது. சமீப காலமாக, புதுச்சேரி அரசுக்கும், திமுகவுக்கும் இடையே பல்வேறு பிரச்னைகளில் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. ஆளுநரின் செயல்பாடுகள், அரசின் கொள்கைகள் போன்ற பல விஷயங்களில் திமுக அதிருப்தி தெரிவித்து வருகிறது. இந்த புறக்கணிப்பு, ஆளுநரின் நிர்வாகத்திற்கு எதிரான திமுகவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
மறுபுறம், காங்கிரஸ் கட்சி இந்த விருந்தில் பங்கேற்றது. கட்சியின் சார்பில் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள்முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். புதுச்சேரி அரசியலில் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே கூட்டணி உறவு இருந்தபோதிலும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இந்த நிகழ்வு, புதுச்சேரி அரசியலில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையேயான உறவு, மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகளில் உள்ள வேறுபாடுகளைத் வெளிப்படுத்தியள்ளது.