புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு - கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!
புதுச்சேரியில் 9 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சோலை நகரை சேர்ந்த நாராயணன் – மைதிலி தம்பதியினரின் இரண்டாவது மகள் ஆர்த்தி, கடந்த சனிக்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததார். நீண்ட நேரம் ஆகியும் மகள் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து காவல்நிலையத்திலும் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் விசாரணை தொடங்கிய போலீசார், முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சிறுமி சோலை நகரை விட்டு வெளியே செல்லவில்லை என்பதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து வீடு வீடாக சோதனை செய்த போலீசார், சிறுமி கிடைக்காததால் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் சிறுமியின் கொலைக்கு நீதி வழங்க கோரி மக்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை ஒரு பகுதியாக சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் ஒன்று திரண்டு கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண் குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும். இறந்துபோன சிறுமிக்கு நீதி வேண்டும். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். போதைப் பொருளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
திடீரென்று ஒன்று கூடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரை தள்ளிவிட்டு விட்டு கடலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.