மக்களவை தேர்தலில் புதுச்சேரி தொகுதி பாஜகவிற்குத்தான் - முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
புதுச்சேரி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சியினர் இறங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பாஜக சார்பில் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் களம் இறங்க உள்ள அக்கட்சியின் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் நேற்று (மார்ச்.2) வெளியிடப்பட்டது.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக தேசியப் பொதுச் செயலாளர் வினோத் தவ்டே வெளியிட்டார். இந்த நிலையில், புதுச்சேரி தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், முதலமைச்சருமான ரங்கசாமி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும், வேட்பாளர் யார் என்பதை பாஜக விரைவில் அறிவிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்திற்காக புதுச்சேரி வருவார் எனவும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.