மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!
மக்களவைத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வெளியிட்டார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் டெல்லியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மூத்த தலைவர்களான பிரகாஷ் காரத், பிருந்தா காரத் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
இந்த தேர்தல் அறிக்கையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். மக்களவையில் சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரி கட்சிகளின் பலத்தை அதிகரிக்க வேண்டும், மத்தியில் மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :
1. அரசியல், அரசு மற்றும் அரசு நிர்வாகம் ஆகியவற்றிலிருந்து மதத்தைப் பிரிக்கும் கொள்கையை அசைக்காமல் கடைப்பிடிப்பதாக சிபிஐஎம் உறுதியளிக்கிறது. வெறுப்பு பேச்சு மற்றும் குற்றங்களுக்கு எதிராகவும், மேலும் CAA ஐ நீக்குவதிலும் சிபிஐஎம் உறுதியாக உள்ளது.
2. UAPA மற்றும் PMLA போன்ற கொடூரமான சட்டங்களை நீக்குவதற்கும், சுதந்திரமான நிறுவனங்களின் சுயாட்சியைப் பாதுகாப்பதற்கும், மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சிபிஐஎம் போராடும்
3. இந்தியாவுக்கு உடனடி தேவை தேர்தல் சீர்திருத்தங்கள்; தேர்தலுக்கு அரசே நிதி வழங்க வேண்டும், கார்ப்பரேட்டுகள் அல்ல
4. இந்தியாவின் பொருளாதார இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், தனியார்மயமாக்கலை மறுபரிசீலனை செய்வதற்கும், தொழிலாளர் சார்புச் சட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், விவசாயிகளின் பாதுகாப்பை #MSP உத்தரவாதங்கள் மூலம் உறுதி செய்வதற்கும் சிபிஐஎம் உறுதிபூண்டுள்ளது
5. பெட்ரோலியம் மீதான வரிகளை அவசரமாகக் குறைக்கவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், மானிய விலையில் வழங்கப்படும் தானியங்களின் விநியோகத்தை மீட்டெடுக்கவும், உலகளாவிய பொது சுகாதார அமைப்பைச் செயல்படுத்தவும் சிபிஐஎம் அழைப்பு விடுக்கிறது
6. வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாகச் சேர்ப்பது, அரசு காலிப் பணியிடங்களை அவசரமாக நிரப்புதல், MSME களை வலுப்படுத்துதல், MGNREGA நிதியை இரட்டிப்பாக்குதல் மற்றும் வேலையின்மை உதவித்தொகை வழங்குதல் போன்றவற்றிற்காக சிபிஐஎம் போராடும்
7. கல்விக்கு #GDP யில் குறைந்தபட்சம் 6% நிதி ஒதுக்குவதை உறுதிபடுத்தவும், கல்வி வணிகமயமாக்கலையும், வகுப்புவாதம் மற்றும் மையப்படுத்தலுக்கு எதிராகவும் சிபிஐஎம் போராடும்
8. தனியார் துறையில் இடஒதுக்கீடு, ஆதிவாசிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், சாதிவாரிக் கணக்கெடுப்பு, பெண்களுக்கு 1/3 இட ஒதுக்கீடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்குதல்
9. மாநிலங்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீட்டெடுத்தல், மொத்த மத்திய வரிகளில் 50% மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்தல், மாநிலங்களின் செலவில் மையமயமாக்கலை ஊக்குவிக்கும் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டு வருதல்