‘தி கோட்’ திரைப்பட சுவரொட்டிகளில் தவெக கட்சி பெயரை பயன்படுத்த வேண்டாம் என நிர்வாகிகளுக்கு கட்சி சார்பில் அறிவுறுத்தல்!
விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பெயரை பயன்படுத்தக் கூடாது என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (G.O.A.T. – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கி இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர். மேலும் இது விஜய் அரசியலுக்கு வந்தபிறகு வெளியாகும் முதல் படமாகும்.
இந்நிலையில் பட வெளியீட்டை முன்னிட்டு நோட்டீஸ், பேனர்கள் ஏதேனும் வைத்தால், அதில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று பதிவு செய்யாமல் ‘விஜய் மக்கள் இயக்கம்’ என பதிவு செய்ய வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுப்பட்டுள்ளது. தவெக என்பது அரசியல் கட்சி என்பதால் அரசியலுக்கு மட்டுமே கட்சி பெயரை பயன்படுத்த வேண்டும் எனவும், திரைப்படங்களுக்கு கட்சியின் பெயரை பயன்படுத்தக் கூடாது எனவும் நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.