“கோழைத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்” - பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!
ஜம்மு- காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடுவது வழக்கம். அந்த வகையில் இன்று(ஏப்ரல்.22) பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியை சுற்றிப்பார்க்க வந்தபோது முகமூடி அணிந்து வந்த பயங்கரவாதிகள் திடீரென சுப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த பயங்கர தாக்குதலில் இதுவரை 26 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ஸ்ரீ நகர் விரைந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு- காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோருடன் இணைந்து தாக்குதல் குறித்து கேட்டறிந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி, ஜம்மு- காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, அமெரிக்க துணை அதிபர் கே.டி. வான்ஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Deeply pained by the barbaric terror attack in #Pahalgam, J&K, claiming innocent lives, including our Tamil Nadu brethren. I strongly condemn this cowardly and despicable act of violence. My heartfelt condolences to the bereaved families, and prayers for the swift recovery of the…
— TVK Vijay (@TVKVijayHQ) April 22, 2025
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ”ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் நமது தமிழ்நாட்டு சகோதரர்கள் உட்பட அப்பாவி உயிர்களைப் பலிகொண்டது குறித்து ஆழ்ந்த வேதனை அடைகிறேன்.
இந்த கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.