“விஜயகாந்த் இறுதி ஊர்வலம் முடியும் வரை பொதுமக்கள் ஈவிஆர் சாலையை தவிர்க்கவும்!” - சென்னை போக்குவரத்து போலீசார்!
விஜயகாந்த் இறுதி ஊர்வலம் முடியும் வரை பொதுமக்கள் ஈவிஆர் சாலையை தவிர்க்குமாறு சென்னை போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இதன் பின் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் கூட்டம் அலை மோதியதால் விஜயகாந்த் உடல் இன்று பொதுமக்களின் பார்வைக்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படுவதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, இன்று தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக காலை 6 மணியளவில் விஜயகாந்த் உடல் கொண்டு வரப்பட்டது. பின்னர் பிற்பகல் 2.30 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.
இதனை அடுத்து சரியாக 2.45 மணி அளவில் தீவுத்திடலில் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது . தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு உடல் கொண்டு வரப்படும் நிலையில் வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இருபுறமும் நின்று விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் உடல் கொண்டு வரப்படும் பாதை:
- தீவு திடல்
- பல்லவன் சாலை
- சென்ட்ரல் முனையம்
- தினத்தந்தி சிக்னல்
- கீழ்பாக்கம்
- பச்சையப்பன் கல்லூரி
- அமைந்தகரை
- அரும்பாக்கம்
- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கோயம்பேடு தேமுதிக அலுவலகம்
தேமுதிக அலுவலகம் விஜயகாந்தின் உடல் வந்தடைந்த பின் இன்று மாலை 4:45 மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகம் வரை விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வழி நெடுகிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் வெள்ளத்தில் விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக தேமுதிக அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஊர்வலம் முடியும் வரை பொதுமக்கள் ஈவிஆர் சாலையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்ன சென்னை போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Traffic Advisory:
ஊர்வலம் முடியும் வரை பொதுமக்கள் ஈவிஆர் சாலையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Public are requested to avoid EVR Salai till the procession is over.#ChennaiPolice@tnpoliceoffl@SandeepRRathore @R_Sudhakar_Ips#Vijayakanth pic.twitter.com/txRdIWlTIR
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) December 29, 2023