For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டங்கள்" - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என துணை முதலமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.
11:54 AM Mar 02, 2025 IST | Web Editor
 மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டங்கள்    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement

புதிய கல்விக்கொள்கை, தொகுதி உள்ளிட்டவை தொடர்பாக மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக இளைஞரணி சார்பில் 234 தொகுதிகளிலும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என துணை முதலமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார். இந்த கண்டன பொதுக்கூட்டங்கள் நாளை (மார்ச் 3) முதல் மார்ச் 10 ம் தேதி வரை நடைபெறுகிறது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

Advertisement

"திமுக இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தியைத் திணிக்கும், நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரை முற்றிலுமாக புறக்கணித்து, நிதிப் பகிர்விலும் பாரபட்சம் காட்டும், தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டை வஞ்சித்து, அநீதி இழைக்கும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில், சட்டமன்றத் தொகுதிதோறும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் முதன்மைப் பேச்சாளர் ஒருவர், இளம் பேச்சாளர் ஒருவர் என தொகுதிக்கு இரண்டு பேர் பேசவுள்ளனர். மாநில உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், 72-வது பிறந்தநாள் காணும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்தும், எளிய மக்களுக்குப் புரியும் வகையில், விளக்கிப் பேசுவார்கள்.
தமிழ் மக்களின் உரிமைக்குக் குரல் எழுப்பிடும் வகையிலும், உரிமையைத் தர மறுக்கும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையிலும், இந்தப் பொதுக்கூட்டங்களை எழுச்சியுடன் நடத்துமாறு இளைஞர் அணி நிர்வாகிகள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!"

இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement