ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு பிப்.5ஆம் தேதி பொது விடுமுறை!
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ந்தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 7-ம் தேதி வந்தவுடன் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தது.
இதில் திமுக, நாதக உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதிமுக, தேமுதிக, பாஜக போன்ற பிரதான எதிர்க்கட்சிகள் இத்தேர்தலை புறக்கணித்துள்ளன. தொடர்ந்து தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் நாதகவும், திமுகவும் இறங்கியுள்ளது.
இந்த நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் பிப்.5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்காளராக இருப்பவர்கள் மாநிலத்தில் எந்தப் பகுதியில் இருந்தாலும், அவர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.