வங்கதேச வன்முறை | 105 பேர் பலி... ஊரடங்கு அமல் - தாயகம் திரும்பும் இந்தியர்கள்!
அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறையில் 105 பேர் உயிரிழந்தனர்.
வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5ம் தேதி உயர்நீதிமன்றம் சட்டவிரோதம் என்று அறிவித்தது. கடந்த 10-ம் தேதி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இடஒதுக்கீடு தொடர்பான அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 16ம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறை காரணமாக 105 பேர் உயிரிழந்தனர், மேலும் 1,500 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். போராட்டங்கள் வலுவடைந்த நிலையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கதேசத்தில் கல்வி பயிலச் சென்ற 300 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். அங்கு கல்வி பயிலச் சென்ற மாணவர்கள் பெரும்பாலானோர் உத்தரப் பிரதேசம், ஹரியானா, மேகாலயா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். வங்கதேசத்தில் மருத்துவம் பயில அவர்கள் அங்கு செல்கின்றனர்.
இது குறித்து ஹரியானாவைச் சேர்ந்த மாணவர் ஆமீர் கூறுகையில், "நான் சிட்டகாங் சிட்டி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயில்கிறேன். இங்கே நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இணைய சேவை இல்லை. குடும்பத்தைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அதனால் நாங்கள் தாயகம் திரும்புகிறோம். விமான டிக்கெட்டுகள் இல்லை. எப்படியாவது இந்த மோசமான நிலையில் இருந்து தப்பிக்க சாலை மார்க்கமாக பயணப்படுகிறோம்” என்றார்.
வங்கதேசத்தில் இருந்து 125 மாணவர்கள் உட்பட 245 இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கு வழிவகுக்கப்பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. ஆனால், அங்கு வசிக்கும் 15,000-க்கும் அதிகமான இந்தியர்கள் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக தெரிவித்தது.
வங்கதேச வன்முறை குறித்த கேள்விக்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இதை வங்கதேசத்தின் உள்நாட்டு விவகாரமாக பார்க்கிறோம்” என்றார்.