வங்கதேசத்தில் மீண்டும் போராட்டம்... #President பதவி விலகக்கோரி முற்றுகையிட்டதால் பரபரப்பு!
வங்கதேசத்தின் அதிபர் முகமது ஷஹாபுதின் பதவி விலகக் கோரி, அவரது மாளிகையை போராட்டக்காரர்கள் நேற்று இரவு முற்றுகையிட்டனர்.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில், தற்போது புதிய அதிபருக்கு எதிராகவும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிற்பகலில் அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவி விலக வேண்டும் உள்பட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, நேற்றிரவு அதிபர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்திய மாணவர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அதிபரை ராஜிநாமா செய்யக் கோரி அவர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தடுப்பை மீறி போராட்டக்காரர்கள் முன்னேற முயற்சித்ததால், பாதுகாப்பு படையினருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஷேக் ஹசீனாவின் சர்வாதிகார அரசின் கூட்டாளியான தற்போதைய அதிபர் உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு, அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், மோதல் ஏற்பட்டு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வங்கதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதாக அறிவித்தது. தொடர்ந்து வங்கதேசத்தின் இடைக்கால பிரதமராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து முகமது சகாபுதீன் அதிபராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.