புதுச்சேரியில் திட்டமிட்டபடி நாளை போராட்டம் - அதிமுக அறிவிப்பு..!
புதுச்சேரியில் தனியார் மருந்து தொழிற்சாலையை மூடக்கோரி, திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில், சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த 14 தொழிலாளர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து அந்த தொழிற்சாலையை மூடக்கோரி, மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, அதிமுக சார்பில் நாளை போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால், அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும் திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும் என புதுச்சேரி அதிமுக அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : தீபாவளி பண்டிகை : சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்..!
இதுகுறித்து அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் தமிழ்வேந்தன் செய்தியாளர்களிடம் பேசியபோது, மருந்து தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டபோது முதல் நபராக மீட்புப் பணியில் ஈடுபட்டவர் புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் என்றும், ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பாஜகவினர், அவதூறு பரப்பி வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.