For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பெரியாரை போற்றும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருதா? மியூசிக் அகாடமி ஆண்டு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்த பெண் இசை கலைஞர்கள்!

12:08 PM Mar 21, 2024 IST | Web Editor
பெரியாரை போற்றும் டி எம் கிருஷ்ணாவுக்கு விருதா  மியூசிக் அகாடமி ஆண்டு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்த பெண் இசை கலைஞர்கள்
Advertisement

டி.எம்.கிருஷ்ணா பெரியாரை போற்றுவதால் மியூசிக் அகாடமி ஆண்டு விழாவை புறக்கணிப்பதாக இசைக் கலைஞர்களான ரஞ்சனி மற்றும் காயத்ரி அறிவித்துள்ளார்.

Advertisement

சங்கீதம் அனைவருக்கும் சமம் என்ற கருத்தை வலியுறுத்தி நிகழ்கால கர்நாடக சங்கீத வரலாற்றில் பல முற்போக்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருபவர் மகாசேச விருதுபெற்ற புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் டி. எம்.கிருஷ்ணா. மேடை கச்சேரிகளில் ஒரு பிரிவினர் மட்டுமே பாடி,  கேட்டு வந்த கர்நாடக சங்கீதத்தை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மார்கழி கச்சேரிகளுக்குப் பதில் ‘ஊரூர் ஆல்காட் குப்பம் விழாவை‘ முன்னெடுத்தவர்.

இந்து பக்தி பாடல்களே அதிகளவு பாடப்படும் கர்நாடக சங்கீதத்தில் அடித்தட்டு மக்களின் பிரச்னைகளை எடுத்துரைக்கும்  ‘ஊரூர் ஆல்காட் குப்பம் விழா’,  சென்னையில் உள்ள நீர்நிலைகளின் மாசு குறித்து  ‘பொறம்போக்கு பாடல்’ அமைதியை வலியுறுத்தி தலையில் குல்லா அணிந்துகொண்டு கர்நாடக இசை மேடைகளில் இஸ்லாமியப் பாடல்களைப் பாடுவது,  கேரள சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை உடைத்தெறியப் பாடுபட்ட கேரள மறுமலர்ச்சியின் தந்தை எனப் போற்றப்படும் நாராயண குரு குறித்த பாடல், சாமானியர்கள் பயணம் செய்யும் ரயில்களில் பாடல் பாடுவது எனத் தொடர்ச்சியாகப் பாட்டிலேயே முற்போக்கான நடவடிக்கையில் டி.எம். கிருஷ்ணா ஈடுபட்டுவருகிறார் .

இந்நிலையில் மெட்ராஸ் மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார்.  எனவே இந்த வருடம்  நடைபெற உள்ள 98-வது மியூசிக் அகாடமி ஆண்டு மாநாட்டில்  டி.எம் கிருஷ்ணாதான் தலைமை தாங்க உள்ளார்.

டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதற்கும்,  மாநாட்டுக்கு அவர் தலைமை தாங்குவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பிரபல கர்நாடக இசை கலைஞர்களான ரஞ்சனி – காயத்ரிஆகியோர்  இந்த நிகழ்ச்சியை  புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் சமூக வலைதள பதிவில்,

“2024ம் ஆண்டு மியூசிக் அகாடமியின் மாநாட்டில் பங்கேற்க போவதில்லை.  அதேபோல டிசம்பர் 25-ஆம் தேதி நடைபெறும் இசைக் கச்சேரியில் பாடுவதில் இருந்தும் விலகுகிறோம்.  இந்த மாநாடு டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறவுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் கர்நாடக இசை உலகின் மீது தவறான பிம்பங்களை கட்டமைத்து அதனை அவ்வபோது சேதப்படுத்தி வருகிறார்.

அதேபோல வேண்டுமென்றே இந்த சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தி,  தியாகராஜர் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய மேதைகளை அவமதித்துள்ளார்.  அவரது செயல்கள் கர்நாடக இசைக்கலைஞராக இருப்பதே அவமானம் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் உள்ளது.  மேலும் ஆன்மீகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்.

பல ஆண்டுகளாக கர்நாடக இசை தான் தங்கள் வாழ்க்கை என நினைத்து வாழும் இசை கலைஞர்களின் கடின உழைப்பை கொச்சைப்படுத்தும் வகையில் அவரது செயல்கள் உள்ளன.

பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார்.  பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது.  எனவே இந்த விழாவை  புறக்கணித்து இந்த ஆண்டு மாநாட்டில் கலந்துகொண்டால் அது நாம் கொண்ட நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாகும்”  என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags :
Advertisement