உ.பி.யில் மசூதி ஆய்வுக்கு எதிர்ப்பு | வன்முறையால் 3 பேர் உயிரிழப்பு - நீடிக்கும் பதற்றம்!
உத்தர பிரதேசத்தில் ஜமா மசூதியில் ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 3பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் ஜமா மசூதி கட்டப்படுவதற்கு முன்பாக அந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும், எனவே அந்த இடத்தில் ஆய்வு நடத்தி உண்மை தன்மையை சரிபார்க்க கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, அந்த மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதற்காக சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதிக்கு நேற்று காலை சென்றனர்.
அப்போது, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மசூதியை ஆய்வு செய்ய வந்த போலீசார் மீது பொதுமக்கள் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் காரணமாக போலீஸ் மற்றும் பொது மக்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதையும் படியுங்கள் : “தோனியுடனும், ருதுராஜ் தலைமையிலும் களமிறங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – சிஎஸ்கே அணிக்கு திரும்பிய அஸ்வின் நெகிழ்ச்சி!
இந்த வன்முறை சம்பவத்தில் 3பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காயமடைந்தனர். வன்முறைக்கு மத்தியிலும் ஆய்வு குழுவினர் மசூதியை ஆய்வு செய்து முடித்தனர். நவம்பர் 29 ஆம் தேதி ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் ஆய்வு குழுவினர் சமர்ப்பிக்க உள்ளனர். இந்நிலையில் சம்பல் பகுதியில் இணையச் சேவைகள் 24 மணி நேரம் தடை செய்யப்பட்டுள்ளது.