அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவிக்கக் கோரி பாஜக தலைமை அலுவலகம் முன்பு போராட்டம்!
சிபிஐ காவலில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விடுவிக்கக் கோரி டெல்லி டிடியு மார்க்கில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகே ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கடந்த 20-ந் தேதி விசாரணை நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. விசாரணை நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து, விசாரணை முடியும் வரை ஜாமீன் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை வாதம் முன்வைத்ததால் கெஜ்ரிவாலின் ஜாமீனை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில் கெஜ்ரிவாலை விடுதலை செய்யக் கோரி டிடியு மார்க்கில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு அருகில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் ஒன்றுகூடி, பாஜகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.மத்திய அமைப்பின் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இதையும் படியுங்கள் : நடிகர் ஹரிஷ் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு, ’டீசல்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து!
இது குறித்து மூத்த காவல் அதிகாரி கூறுகையில் :
"போராட்டத்திற்கு உரிய அனுமதி பெறாததால், பாஜக தலைமையகம் நோக்கி பேரணியாகச் செல்வதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. போராட்டக்காரர்களைத் தடுக்க தடுப்புகள் போடப்பட்டு, துணை ராணுவ வீரர்கள் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்"
இவ்வாறு மூத்த காவல் அதிகாரி கூறினார்.