டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான போராட்டம் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்திய சோதனையில் சுமார் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதையடுத்து டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, அதனைக் கண்டித்து 17ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கு வெளியே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே பாஜகவின் முக்கியத் தலைவர்கள் வீட்டின் முன், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம், தாளமுத்து நடராஜர் மாளிகை, டாஸ்மாக் தலைமை அலுவலகம், பாஜக முக்கியத் தலைவர்களின் வீடு என பல்வேறு இடங்களிலும் சுமார் 500 காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் ஆர்ப்பாட்டத்திற்காக கிளம்பிய நிலையில், காவல்துறையினர் தமிழிசை சௌந்தரராஜனை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்த புறப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அக்கறை அருகே மறித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் டாஸ்மாக் அலுவலகத்துக்கு வெளியே கூடிய பாஜக தொண்டர்கள், நிர்வாகிகளையும் காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.