“இது ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான அழைப்பு!” - டெல்லி காங். தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பேச்சு
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31-ம் தேதி நடைபெற இருக்கும் மெகா பேரணி, நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான அழைப்பாக இருக்கும் என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் புதிய மதுபான கொள்கை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் அம்மாநில முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை பல முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்டவிரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுப்பு தெரிவித்து வந்தார்.
இதற்கிடையில் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை குழு, மார்ச் 21-ம் தேதி கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அன்றிரவு கெஜ்ரிவாலை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து மார்ச் 22-ம் தேதி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையும் படியுங்கள் : “அரசியலும் மதமும் சேர்ந்த எந்த நாடும் உருப்பட்டதில்லை” – மநீம தலைவர் கமல்ஹாசன்!
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, மார்ச் 31-ம் தேதி ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மெகா கண்டண பேரணி நடத்தப் போவதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். இதில் ‘இந்தியா’ கூட்டணியைச் சார்ந்த மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இது தொடர்பாக பேசிய டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி, “மார்ச் 31-ம் தேதி நடக்கும் மெகா கண்டன பேரணி, அரசியல் சார்ந்ததாக இருக்காது. மாறாக நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான அழைப்பாகவும், மத்திய அரசுக்கு எதிரான குரலாகவும் இருக்கும்” என்று தெரிவித்தார்.