"அடுத்த 100 நாளில் ஜி.கே.வாசன் அறிவுறுத்தலின்பேரில் வளமான கூட்டணி" - அண்ணாமலை பேட்டி
அடுத்த 100 நாளில் ஜி.கே.வாசன் அறிவுறுத்தலின் பேரில் வளமான கூட்டணி அமையும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை நேற்று சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்பி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அவர் தெரிவித்ததாவது..
மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும். பிரதமர் மோடியை வேட்பாளராக கொண்ட பாஜகவில் அங்கம் வகிக்க தமாகா முடிவு செய்துள்ளது. இவ்வாறு ஜி.கே.வாசன் எம்பி தெரிவித்தார்.
” எல்லா தரப்பட்ட வகுப்பினரும் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து ஒரு வளமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது தான் பிரதமர் மோடியின் நோக்கம். 2024 - 2029 என்பது மிக முக்கியமான காலகட்டம். அடுத்த 100 நாட்களில் ஜி.கே.வாசனின் அறிவுறுத்தலின்பேரில் ஒரு வளமான தமிழ் கூட்டணியை உருவாக்குவோம். அதன் மூலம், ஜி.கே.மூப்பனாரின் கனவு தமிழக மண்ணிலே நடந்தே தீரும் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.
ஆரம்ப நாளிலிருந்து இன்று வரைக்கும் குறிப்பாக பிரதமர் மோடிக்கு ஆதரவாக ஒரு குரல் இருந்து வருகிறது. பிரதமர் மோடிக்கும் ஜி.கே.வாசனுக்கு இருக்கக்கூடிய நட்பு என்பது தனிப்பட்ட முறையில் ஒரு பந்தம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆழமானது. ஜி.கே.வாசன் அவரது மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதற்கான முயற்சியை முழு மனதுடன் எடுத்துள்ளார்.
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.