முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2001-ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் பா.வளர்மதி. பதவி காலத்தின்போது வருமானத்திற்கு அதிகமாக 1.70 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக இவர் மீதும், இவரது குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கடந்த 2012ம் ஆண்டு பா.வளர்மதி உள்ளிட்டோரை விடுதலை செய்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த செப்டம்பர் 9ம் தேதி தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணைக்கு தடை கோரி முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது ஏற்புடையது அல்ல என பா.வளர்மதி தரப்பில் வாதிடப்பட்டது. இதனிடையே இந்த வழக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி முதல் தொடர்ந்து தினந்தோறும் விசாரிக்கப்படும் என எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளுக்கான சிறப்பு உயர்நீதிமன்ற அமர்வு அறிவித்திருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான சொத்து குவிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிப்பதற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.