For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட திட்டங்கள்! திமுக வெளியிட்ட முழு பட்டியல்!

04:36 PM Apr 12, 2024 IST | Web Editor
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட திட்டங்கள்  திமுக வெளியிட்ட முழு பட்டியல்
Advertisement

1,000 கோடி ரூபாயில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் காக்கும் அயோத்திதாசர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் உள்பட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட திமுக அரசின் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisement

அதன் விவரம் வருமாறு:

சாதி வேறுபாடுகளால் ஒடுக்கப்பட்ட மாந்தர்களின் உரிமைக்காகவும்,  விடுதலைக்காகவும் அவர்களது மனித மாண்பை மீட்டெடுப்பதற்காகவும் அறிவாயுதம் ஏந்திய புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் காட்டிய சமூக நீதிப் பாதையின் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது திமுக அரசு.

கருணாநிதி முதலமைச்சராக வீற்றிருந்தபோது,  பட்டமேற்படிப்பு வரை இலவசப் படிப்பு தந்து ஆதிதிராவிடர்கள் கல்வியில் உயர வழிவகுத்தார்.  ஓலைக்குடிசையில் ஒண்டிக் கிடந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் ஆதிதிராவிடர் வீட்டு வசதி கழகத்தை 1974-இல் தொடங்கிச் செயல்படுத்தி இந்தியாவிற்கே வழிகாட்டினார்.

பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்

ஊரில் ஒதுக்குப்புறத்தில் வாழ்பவர்களை ஊரின் நடுவே வாழச் செய்வதற்கு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரியார் நினைவு சமத்துவபுரக் குடியிருப்புகளை ஏற்படுத்தினார்.  100 வீடுகள் கொண்ட ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் 40 வீடுகளை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்து அங்கே ஒரு ஆதிதிராவிடர் வீட்டின் இரு புறங்களிலும் பிற சாதியினர் வீடுகளை அமைத்து அவர்களிடையிலே வேறுபாடுகள் இல்லாத சமத்துவ வாழ்க்கை மலரச் செய்தார்.  அங்கே சமத்துவச் சுடுகாடு, சமத்துவ சமூக நலக் கூடம் முதலிய அனைத்தையும் சமத்துவச் சிந்தனைகளோடு ஏற்படுத்தினார்.

கருணாநிதி தந்த இட ஒதுக்கீடுகள்

1971-ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர் பழங்குடியினர்களுக்கான இட ஒதுக்கீடுகளை 16 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக உயர்த்தினார். அந்த 18 சதவிகிதம் முழுவதையும் ஆதிதிராவிடர்களுக்கே கிடைக்கச் செய்து மலைவாழ் பழங்குடியினருக்கு ஒரு சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு 1990-இல் வழங்கினார். ஆதிதிராவிடரில் தாழ்ந்து கிடந்த அருந்ததியினருக்கு 4 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கினார். இப்படி இட ஒதுக்கீடுகளால் ஆதிதிராவிடர் பழங்குடியினர் வாழ்க்கைத்தரம் உயர வழிவகுத்த கருணாநிதி செய்த ஒரு புரட்சி இங்கு நினைவுகூர்ந்து போற்றத்தக்கது.

வரலாற்றில் முதன் முறையாக உயர்நீதிமன்ற நீதிபதியாக ஒரு ஆதிதிராவிடர்

தந்தை பெரியார், கருணாநிதியிடம் பேசிக்கொண்டிருந்தபோது 1862 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் தோன்றியது. அதிலிருந்து இதுவரை - 112 ஆண்டுகள் வரை ஒரு ஆதிதிராவிடர் கூட உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டதில்லையே என்று கூறி வருந்தினார். அடுத்த நாளே, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, மாவட்ட நீதிபதிகள் வரிசையில் 8-ஆம் இடத்தில் இருந்த - கடலூர் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஏ.வரதராஜன் என்பவரை 14.2.1973 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார் கருணாநிதி . பின்னர், அந்த வரதராஜன் அவர்களே உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார் என்பது தமிழ்நாடு உயர்த்திப் பிடித்த சமதர்மக் கொள்கையின் வெற்றிச் சின்னமாகும்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழிகாட்டும் திமுக அரசு

இந்த வரலாறுகளை எல்லாம் பின்னணியாகக் கொண்ட திமுக அரசு 2021-ல் பொறுப்பேற்றபின், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் வகையில் கடந்த மூன்றாண்டுகளில் “அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி” என்ற நோக்குடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை சமூக, கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்த்திடவும், அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடவும் தனிக்கவனம் செலுத்திப் பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறது.

அரசியலமைப்புச் சட்ட நாயகர் அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் போற்றும் விதத்தில் அவரது பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் நாளை சமத்துவ நாளாக அறிவித்து நாம் கொண்டாடி வருகிறோம். அந்நாளில் சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு எங்கும் மேற்கொள்ளப்படுகிறது.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்காகத் தொண்டாற்றிவரும் ஒருவருக்கு, ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு வழங்கும் அண்ணல் அம்பேத்கர் விருதின் பரிசுத் தொகை 1 லட்சம் ரூபாய் என்பது 5 லட்சம் ரூபாய் எனத் திமுக அரசால் உயர்த்தி வழங்கப்படுகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்டபூர்வ உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் உரிய ஆலோசனைகளை அரசுக்கு வழங்கிட தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களைத் தொழில் முனைவோராக மாற்றிட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை இந்தத் திமுக அரசு அறிமுகம் செய்துள்ளது. அத்திட்டத்தின் கீழ், உற்பத்தி, வணிகம், மற்றும் சேவை சார்ந்த புதிய தொழில்களைத் தொடங்கிட மொத்த மதிப்பீட்டில் 35 சதவீதத் தொகை முதலீட்டு மானியமாகவும் (capital subsidy), 65 சதவீதத் தொகையில் அதிகபட்சமாக 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடனாகவும் வழங்கப்படுகிறது. 65 சதவிகித வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தில் 6 சதவிகித வட்டியையும் திமுக அரசே ஏற்கிறது.

முதலமைச்சரின் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின்கீழ் (CM-ARISE) 225 பயனாளிகளுக்கு 16 கோடியே 76 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 10 கோடியே 65 லட்சம் ரூபாய் வங்கிக் கடனுடன் 5 கோடியே 80 லட்சம் ரூபாய் மானியத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஊரகப்பகுதிகள் மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய் வீதம் 2023-2024 முதல் 5 ஆண்டுகளுக்கு மொத்தம் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு பட்டியல் இனத்தவர் / பழங்குடியினர் புத்தொழில் நிதியத்தின்கீழ் தொழில் முனைவோருக்கான சமூக நீதியை உறுதிப்படுத்திடும் நோக்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரால் நடத்தப்பட்டுவரும் நிறுவனங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு முதலீடு வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் 21 புத்தொழில் நிறுவனங்கள் 28 கோடியே 10 லட்சம் ரூபாய் அளவுக்குப் பயன்பெற்ற நிலையில்; இத்திட்டத்தின் சிறப்பான வெற்றியைக் கருத்தில் கொண்டு 2023-24-ஆம் நிதியாண்டிற்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட 26 நிறுவனங்களில் 13 நிறுவனங்கள் பெண்களே நிர்வகிக்கும் நிறுவனங்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும்.

தூய்மைப்பணியாளர் நல வாரியத்தின் மூலம் 87 ஆயிரத்து 327 உறுப்பினர்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ‘மிக்‌ஜாம்’ புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் மழைநீர் வெளியேற்றுதல் மற்றும் தூய்மைப்பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக தலா 4000 ரூபாய் வழங்கிப் பாராட்டப்பட்டுள்ளனர்.

நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 மாணவர் விடுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணா சாலையிலுள்ள எம்.சி.ராஜா விடுதி வளாகத்திற்குள்ளேயே 1 லட்சம் சதுரஅடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய ஆதிதிராவிடர் மாணவர் விடுதி 45 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்படுகிறது.

முனைவர் பட்டப் படிப்பிற்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உதவித் தொகை 50 ஆயிரம் ரூபாய் என்பது 1 லட்சம் ரூபாய் என உயர்த்தப்பட்டு; 2,974 மாணவர்கள் பயனடைந்து உள்ளனர்.

வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான வருமான உச்சவரம்பு 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு 31 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி விடுதிகள் மற்றும் அரசுப் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மாதாந்திர உணவுக் கட்டணம் 1,000 ரூபாய் என்பது 1,400 ரூபாய் எனவும், கல்லூரி மாணாக்கர்களுக்கு 1,100 ரூபாய் என்பது 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை 50 ஆயிரம் ரூபாய் என்பது 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு; இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களின் சிறந்த தமிழ்ப் படைப்புகள் அனைத்து மக்களுக்கும் பயன் தரும் வகையில் அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுகின்றன.

விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த மூன்றாண்டுகளில் பழங்குடியினர் குடியிருப்புகளில் 475 கோடி ரூபாய்ச் செலவில் 25 ஆயிரத்து 262 அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மக்களிடையே தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வை வளர்த்திட ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ’’மனிதநேய வார விழா’’ நடத்தப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 166 கோடி ரூபாய்ச் செலவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் என அமைக்கப்பட்டுள்ளன.

வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் எவ்வித வேறுபாடுமின்றி, பிறர் போற்ற வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த ஓராண்டில் மட்டும் 102 பேர் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தாட்கோவால் செயல்படுத்தப்படும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் 10 ஆயிரத்து 466 பயனாளிகளுக்கு 152 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் (Tatkal Scheme) அவர்கள் மின் இணைப்புப் பெற 90 சதவீதம் மானியமாக. 46 கோடியே 65 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 16 கிராமங்களில் வாழும் இருளர் மக்களுக்கு 967 ஏக்கர் நிலப்பரப்பில் முந்திரி சேகரம் செய்வதற்குச் சிறப்பினமாக 86 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூலித் தொழிலாளிகளாக இருந்த 500 குடும்பங்களைச் சேர்ந்த 2.000-க்கும் மேற்பட்டோர் தற்போது தொழில் முனைவோராக மாற்றப்பட்ட சாதனை நிகழ்த்தப் பட்டுள்ளது.

ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் உன்னிக்குச்சி மூலம் தளவாடப் பொருட்கள் உற்பத்திக்கான தொழிற்கூடம் 1 கோடியே 36 லட்சம் ரூபாய்ச் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

வனத்தில் வாழும் பழங்குடியினரின் வன உரிமையினைப் பாதுகாக்கும் பொருட்டு, 13 ஆயிரத்து 204 தனிநபர் வன உரிமைகளும், 658 சமூக வன உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தகுதியான பழங்குடியினருக்கு அவர்களின் உரிமையினை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிரை வண்ணார் நல வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, அம்மக்களின் வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள 10 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் மற்றும் பழங்குடியினர் நல வாரியம் ஆகியவை திருத்தி அமைக்கப்பட்டு, நலத்திட்ட உதவிகள் பிற வாரியங்கள் வழங்கும் உதவித்தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படுகின்றன.

திமுஜ்க அரசின் இத்தகைய நடவடிக்கைகளால்தான் ,ஆதிதிராவிட பழங்குடியின சமுதாய இளைஞர்கள் எல்லா இடங்களிலும், எல்லாப் பதவிகளிலும், எல்லாப் பொறுப்புகளிலும் எல்லோருக்கும் இணையாக வீற்றிருந்து பணியாற்றி பொருளாதார நிலைகளாலும், சமுதாய மதிப்புகளாலும், பெருமைகளாலும் உயர்ந்து சிறந்து வருகின்றனர் என்பதைக் காணமுடிகிறது.

இவ்வாறு திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement