For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புலி தாக்கி உயிரிழந்த பெண்... குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரியங்கா காந்தி!

கேரள மாநிலம் வயநாட்டில் புலி தாக்கி உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு, இன்று நேரில் சென்ற எம்பி பிரியங்கா காந்தி, அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
02:59 PM Jan 28, 2025 IST | Web Editor
புலி தாக்கி உயிரிழந்த பெண்    குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய பிரியங்கா காந்தி
Advertisement

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி, பஞ்சாரகொல்லி பகுதியில் கடந்த 24ம் தேதி காபி தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற ராதா என்ற பெண்ணை புலி தாக்கியதில், அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Advertisement

இதனிடையே மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கேட்டும், சம்பந்தப்பட்ட புலியை சுட்டு கொல்ல வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனைத்தொடர்ந்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இரண்டு நாட்களாக புலியை தேடும் பணி தொடர்ந்து நிலையில், தேடுதல் பணியில் இருந்த RRT குழுவை சேர்ந்த ஜெயசூர்யா என்பவரையும் புலி தாக்கியது.

இதனையடுத்து புலியை சுட்டுப்பிடிக்க அம்மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் உத்தரவிட்டார். இதற்காக பஞ்சாரகொல்லி பகுதியை சுற்றியுள்ள நான்கு கிராமங்களுக்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் புலி பிலாக்காவு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அருகில் படுத்திருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க அருகில் நெருங்கினர்.

அப்போது புலி உயிரிழந்த நிலையில் கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து புலியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. பெண் கொல்லப்பட்ட பகுதியில் 24ஆம் தேதி பதிவான புகைப்படத்தை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது உயிரிழந்தது அதே புலி தான் என வனத்துறை உறுதி செய்தது.

இறந்த புலியின் உடல்களில் இருந்த காயத்தை வைத்து வேறொரு புலியுடன் சண்டையிட்டு இருக்கலாம் எனவும், அது உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்பபட்டது. தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் உண்மையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் புலி தாக்கியதில் உயிரிழந்த பழங்குடியின பெண் ராதாவின் கணவரை நேற்று தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறிய வயநாடு எம்பி பிரியங்கா காந்தி, இன்று நேரடியாக அவரது வீட்டிற்கு சென்று உறவினர்களிடம் ஆறுதல் கூறினார். தொடர்ந்து விலங்குகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க கோரி இன்று மாலை காங்கிரசார் நடத்தும் பாதயாத்திரையிலும் கலந்து கொள்கிறார்.

Tags :
Advertisement