சென்னையில் மின்சாரம் தாக்கி தனியார் கார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு!
சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் காமராஜபுரம் பவனந்தியர் தெருவில் உள்ள பேக்கரி கடை அருகே மின்சார கம்பத்தில் தனியார் நெட்வொர்க் கேபிள் மூலமாக மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது
சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் காமராஜபுரம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வின்(35) என்பவர் பேக்கரி கடைக்கு வந்து உள்ளார். அப்போது கடைக்குள் சென்றபோது மின்சார கம்பத்தில் இருந்த ஒயர் உரசியதில் தூக்கி வீசப்பட்டார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் உடல் கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து உயிரிழந்த அஸ்வினின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மின்கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் தனியார் ஒயர்களை அகற்ற கோரி பலமுறை மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்படும் காட்சி வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.