தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து - 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்!
ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த எட்டியம்பட்டி பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் கோயிலுக்கு தனியார் பேருந்தில் சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது விரியம்பட்டி சந்திப்பு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அன்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து, காயமடைந்த பெண்கள் மீட்கப்பட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தினால் கிருஷ்ணகிரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பகுதி செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.