ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பிரதமர் நாளை வருகை : பிற்பகல் 2:30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை!
பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் மேற்கொள்ள உள்ளதால் சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணி வரை கோயிலில் பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதி இல்லை என என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம்
ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்
நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று முதல் ஜனவரி 31 வரை நடைபெற உள்ளது.
கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஜன.4-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை துவக்கி வைக்க இன்று தமிழ்நாடு வருகிறார். இதன் பின்னர் பிரதமர் மோடி சனிக்கிழமையன்று திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் தரிசனம் மேற்கொள்ள உள்ளார். ஆகையால் சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணி வரை அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பிரதமரின் வருகையையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.